தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் எந்த இழுபறியும் இல்லை எனவும், அகில இந்திய தலைமை முடிவு செய்யும் தலைவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் ஊழல்களை மறைக்க பொருளாதார வீழ்ச்சி என பொய் கூறிவருகின்றனர். உலகில் அதிக வளர்ச்சி உள்ள 5 நாடுகளில் சீனாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, இந்தியா முதலிடத்தில் உள்ளது. வரவிருக்கும் எலக்டிரிக் வாகனங்கள் வாங்கலாம் என மக்கள் புதிய வாகனங்களை வாங்குவதில்லை.
பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை. பொருளாதாரம் பற்றி மக்கள் பீதியடைய தேவையில்லை. பொருளாதாரம் பற்றி பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த கல்லூரியில் பொருளாதாரம் படித்தார் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வதோரா ஆகியோருக்கும் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் எந்த இழுபறியும் இல்லை எனவும், தலைவரை அகில இந்திய தலைமை முடிவு செய்யும் எனவும் கூறிய ஹெச்.ராஜா, அக்கட்டளையை தொண்டர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார். பாஜக தலைவராக 15 பேரை ஊடகங்கள் அடையாளம் காட்டியுள்ளன எனவும், தலைவர் பொறுப்பிற்கு என் பெயர் அடிபடுவது எனக்கு வலிக்கிறது எனவும் அவர் கூறினார்.
தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகளவில் பாஜகவில் இணைந்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தவிர்க்க முடியாது எனவும், சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளுக்கு தேர்தல் விரைவில் வரும் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.