![gutka items found in north india train](http://image.nakkheeran.in/cdn/farfuture/VRiJiNgBoNm5bWHbXn40WLteFk63-Gv_YKD0ovVmilA/1634108352/sites/default/files/inline-images/th_1331.jpg)
ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் பகுதியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்பட்டுவருகிறது. அந்த ரயில், திருச்சி வழியாக ராமேஸ்வரம் சென்றடையும். அந்தச் சிறப்பு ரயில் கடந்த 11ஆம் தேதி திருச்சி ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது ரயில்வே பாதுகாப்புப்படை குற்றப்புலனாய்வுத் துறையினர் அந்த ரயிலில் ஏறி வழக்கமான சோதனை நடத்தினார்கள். அப்போது எஸ் 9 பெட்டியின் கதவு பின்புறத்தில் ஒரு அட்டைப்பெட்டி, 2 பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது அதில் பான்மசாலா உள்ளிட்ட 20 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குட்காவைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை ரயில்வே பாதுகாப்புப்படை குற்றப்புலனாய்வுத் துறையினர், போதை தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், இன்று (13.10.2021) அதிகாலை கொல்கத்தாவிலிருந்து திருச்சி வந்த விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியின் கழிவறை கதவுக்கு அருகே கேட்பாரற்று இரண்டு பிளாஸ்டிக் பைகள் இருந்தன. அவற்றை இரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சோதனை செய்தனர். அதில், இரண்டு பண்டல் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 23 கிலோ எடை கொண்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/DubQ5pFhFmJ6naIfdJOZHDkck90iwp2Ku921ttHDGIQ/1634108400/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_28.jpg)
இப்படி தொடர்ந்து வடமாநிலங்களில் இருந்துவரும் ரயில்களில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் சிக்குவதால், வடமாநிலங்களில் இருந்துவரக்கூடிய அனைத்து ரயில்களிலும் அதிரடியாக சோதனை செய்யும் பணியை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.