சேலத்தில், கண்டெய்னர் லாரியில் பாக்கு மட்டைக்குள் பதுக்கிக் கடத்தி வரப்பட்ட குட்கா உள்ளிட்ட 15 லட்சம் ரூபாய் போதைப் பொருள்களை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடு முழுவதும் பான் மசாலா, புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற பொருள்கள் விற்பனை செய்வோர் மீது உணவுப்பாதுகாப்புத்துறை, காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும், போதை பொருள்கள் கடத்துவதும், பதுக்கி விற்பதும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 25, 2018) அதிகாலையில், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள், ஓமலூர் டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த புதிய கண்டெய்னர் வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில் பாக்கு மட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றி பார்த்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த வாகனத்தில் மொத்தம் 100 சிறு சிறு பெட்டிகளில் பான் மசாலா, நிகோடின் ஆகியவை தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு 15 லட்சம் ரூபாய்.
விசாரணையில், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தது மேச்சேரியை சேர்ந்த பச்சமுத்து என்பதும், அவர்தான் அந்த வாகனத்தின் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட புகையிலை பொருள்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்கு அனுப்பப்படுகிறது என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அந்த வாகனத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை நடந்து வருகிறது.