வன்னியர் சங்கத் தலைவரும், எனது பொதுவாழ்க்கையின் 16 ஆண்டுகால நண்பருமான காடுவெட்டி குரு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மனதை வருத்துகிறது. அரியலூர் மாவட்டம், காடுவெட்டி குரு அவர்கள் கொஞ்சநாளாக உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் இருந்து 25.05.2018 வெள்ளிக்கிழமை மறைந்தார்.
1980ல் இருந்து 1996வரை நானும் அவரும் சமுதாயப்பணியில், இடஒதுக்கீடு போராட்டத்தில் ஒன்றாக பயணித்தோம். 1991ல் நான் பாமகவின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தபோது அவர் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளராக இருந்து சிறப்பாக பணியற்றியவர்.
1991 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் நானும், ஜெயங்கொண்டம் தொகுதியில் துறைராஜும் பாமக சார்பில் போட்டியிட்டபோது தேர்தல் பணியை சிறப்பாக செய்தவர்.
இட ஒதுக்கீட்டு போராட்டங்களான ஒருநாள் சாலைமறியல், ஒருநாள் ரயில்மறியல், ஒருவாரம் சாலைமறியல், தேர்தல் புறக்கணிப்பு, ஜெயங்கொண்டம் நிலக்கரி அனல்மின் திட்ட போராட்டம், இலவச மின்சாரத்தை ஜெயலலிதா நிருத்தியபோது பாமக நடத்திய தூக்குக்கயிறு போராட்டம், காவிரியில் 205 டெம்சி தண்ணீர் விடவேண்டும் என்ற தீர்ப்பின் போது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கன்னடத் தமிழர்களை காக்க புறப்பட்ட போராட்டம் , இலங்கையில் இனக்கலவரம் ஏற்ப்பட்ட போது நடத்திய போராட்டம், நெய்வேலியில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை மற்றும் இழப்பீடு கொடுக்க கோரி நடைபெற்ற போராட்டம், பாமக சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டியார் தாமரைக்கனியால் சட்டமன்றத்தில் தாக்கப்பட்டபோது நடத்திய போராட்டம் என பல்வேறு தளங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நண்பர் குரு அவர்களின் பணி வியப்புடையதாக இருக்கும்.
அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு பலமுறை சென்றிருக்கிறார். ஆனால் அதர்க்காக அச்சப்பட்டது இல்லை. ஆரம்ப காலத்தில் பேச்சாற்றல் குறைவாக இருந்தாலும் காலப்போக்கில் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் மிகுந்த பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார்.
அவரின் கடின உழைப்பே அந்த இயக்கத்தின் மாபெரும் வளர்ச்சி என்பதை யாரும் மறுக்க முடியாது.
1996ல் அந்த இயக்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்ட போதிலிருந்து எனக்கும் அவருக்கும் நெருக்கமும் இல்லை, நட்பும் இல்லை.
2001ல் பாமக சார்பில் அவரும் திமுக சார்பில் நானும் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தலில் தொண்டர்களிடம் கடும் உரசல்வந்து கலவரமாக மாறிவிடக்கூடாது என்பதற்க்காக நாங்கள் சந்திக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டால் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொள்வோம். வாக்கு எண்ணும் இடத்தில் அவரும் நானும் இருந்தோம் முடிவு அவருக்கு சாதகமாக தெரிந்தது அவருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வெளியில் வந்தேன்.
சில தேர்தல் கூட்டணி காலக்கட்டத்தில் அவரோடு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறேன். அப்போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுண்டு. நாங்கள் ஒன்றாக பயணித்த காலத்தில் எங்களுக்குள் இருந்த மதிப்பையும், மறியாதையையும், நட்பு ரீதியான கிண்டல் பேச்சையும் கடைசி வறை கடைபிடித்தோம்.
கடைசியாக எனது பெரிய மகள் பல்லவி- இராமச்சந்திரன் திருமணத்திர்க்கு வந்திருந்து வாழ்த்தினார்.
அந்த மாவீரனின் மரணம்! என் மன உள்ளத்தின் துயரம்! வீரவணக்கம்!
மு. ஞானமூர்த்தி
ஒன்றிய செயலாளர் தி.மு.க.
செந்துறை, அரியலூர் மாவட்டம்.