பா.ஜ.க.வின் மாநில அலுவலகமான சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று (04/08/2022) காலை 11.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரையும் ஏக மனதாக ஏற்ற பிறகே வரி அமலானது. மாநில நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருந்தது. பிராண்டட் உணவுப்பொருள் மீதான வரி குறித்து தி.மு.க.வினர் பல பொய்களை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு, இரண்டு நாட்களாக அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை முற்றிலுமாக தரப்பட்டு விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்ற முடியாததற்கு மத்திய அரசை எப்படி குறைகூற முடியும். உத்தரப்பிரதேசம், குஜராத்தை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் போது, மாநில அரசு குறைக்காமல் குறைகூறுவது ஏற்புடையது அல்ல.
தி.மு.க. எம்.பி. கனிமொழி முதலில் மாநில அரசிடம் பேச வேண்டும். மத்திய அரசு கொடுக்கும் நிதி குறித்து தி.மு.க. பேசுவது இல்லை. 4.079% மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி பகிர்வு வந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் தவறான தகவலை அளித்துள்ளார்" எனக் கூறியுள்ளார்.