
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக கடந்த சில வருடங்களாக இருந்த நடிகை குஷ்பு, திடீரென கடந்த அக்டோபர் 12ஆம் தேதி காலை டெல்லி சென்று பா.ஜ.கவில் இணைந்தார். பா.ஜ.கவில் இணைந்தவர் அதுபற்றி விளக்கமளிக்க செய்தியாளர்களைச் சந்தித்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எனக் கொச்சைப்படுத்தி பேசினார். இதுபெரும் கண்டனத்துக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் கடுமையான சர்ச்சையை உருவாக்கியது.
இதுதொடர்பாக குஷ்பு வெளியிட்ட தகவலில், நான் மாற்றுத்திறனாளிகள் மனதை புன்படுத்தி பேசியமைக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டு, மன்னிப்பு கேட்கிறேன் என்றார். இருந்தும் இந்த சர்ச்சை ஓயவில்லை.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் மாற்றுதிறனாளிகள் சங்க தலைவர் ஆறுமுகம் தந்துள்ள புகாரில், மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என பேசியுள்ளார். இது மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அவரின் இந்தப்பேச்சு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 92ஏ படி குற்றமாகும். இதற்கு 5 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் இடமுள்ளதால், இதன்மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். அப்புகாரை செங்கம் நகர காவல்நிலையத்தில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்து என்ன செய்வது என ஆலோசனை கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
`