தென்னகத்தில் பிரசித்தி பெற்ற ஆலங்களில் ஒன்றான நெல்லுக்கு வேலி அமைத்துக் காத்த நெல்லையப்பர் என்றாகிய, அருள் தரும் காந்திமதி உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏப் 27 இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள்ளாக மங்களகர வாத்தியங்கள் வேதப்பாராயணங்கள் முழங்க லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் திரள மங்கலமாக நடந்தேறியது.
இதற்கு முன்பாக ஆலயம் புனரமைக்கப்பட்டு சென்ற 2004ம் ஆண்டு நடந்த பூர்ண கும்பாபிஷேகம் 14 ஆண்டுகட்குப் பிறகு நடத்தப்பட்டது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். காரணம் 12 ஆண்டுகட்கு ஒரு முறை ஆலயங்களின் புனர் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதியாகும் மரபும் கூட.
இந்தக் கும்பாபிஷேகத்திற்காக சுமார் 5 கோடி செலவில் ஆலயத் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டன. இதன் பூர்வாங்க கும்பாபிஷேகப் பணிகள் கடந்த 20ம் தேதி தொடங்கி 24 முதல் 27 வரை 87 யாக குண்டங்கள் 49 வேதிகைகளில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் முதல் நாளான நேற்றைய தினம் யாக சாலை பூஜை சிவாச்சாரியார்கள், ரிஷிகள், தத்துவங்கள் தத்துவார்த்திகளை வேண்டி தர்ப்பணம் செய்கிற வைபவ நிகழ்வும் நடந்தேறியது. யாக சாலை பூஜைகளில் தமிழகத்திலுள்ள அனைத்து ஆதீனங்களும் கலந்து கொண்டார்கள். இந்த யாக சாலை பூஜை முறைகளை தூத்துக்குடி செல்வம் பட்டர் மற்றும் பிச்சையா பட்டர் தலைமையிலான சுமார் 300 அர்ச்சகர்கள் நடத்தினார்கள்.
அதிகாலை 3 மணிக்கு 6வது கால யாக சாலை, பூஜை துவங்குகிறது. காலை 4.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் யாக சாலை பூர்ண ஹூதி, 6 மணிக்கு நாடி சந்தானம் ஸ்பர் ஸாஹூதி நடப்பிற்குப் பின்பு, காலை 7.15 மணிக்கு மகா பூர்ண ஹூதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல்.
பின்னர் 9.30 மணியிலிருந்து 10.25க்குள்ளாக அருள்மிகு நெல்லையப்பர், அருள்மிகு, அருள் தரும் காந்திமதி அம்பாள், ஸ்ரீவேணுவன நாதர் முதலாகிய சமஸ்த தேவ, தேவியர்கள், மகா கும்பாபிஷேகம் நடந்தேறியது. கும்பாபிஷேக பாதுகாப்புகளை நெல்லை மாநகரக் காவல்துறை மற்றும் சிறப்புக் காவல் படையினர் மேற் கொண்டனர். இந் நிகழ்ச்சியை மக்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக மாவட்ட வருவாய் நிர்வாகம், இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுறை என்று அறிவித்திருந்தது.