கள்ளக்குறிச்சி சங்கராபுரம் நெடுஞ்சாலையில் உள்ளது வட மாமந்தூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ஷேக் மதார் என்பவரது மனைவி 75 வயது அலீமா பீ. இவர் பாத்ரூமில் குளிப்பதற்குச் சென்றபோது தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தற்செயலாக அவரது வீட்டுக்குச் சென்ற அவரது உறவினர்கள் அலீமா பீ. ரத்தக் காயத்துடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை நெருங்கிப் பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த தங்க வளையல், செயின், மோதிரம் ஆகியவையும் களவாடப்பட்டிருந்தன.
இதையடுத்து அலீமா பீ. மகன் அலிப்சா மூங்கில்துறைப்பட்டு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலீமாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் விசாரணையில் அலீமா பீ. கொலை செய்யப்பட்டது குறித்து அவரது பேரன் சல்மான் செய்யது என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஊரிலிருந்து தப்பிச் செல்ல மூங்கில்துறைப்பட்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சல்மானை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது பாட்டியிடம் குடிப்பதற்காக அடிக்கடி பணம் வாங்கிச் செல்வதுண்டு.
அப்படி சம்பவத்தன்று மது குடிக்கப் பணம் கேட்டபோது அவர் தர மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமுற்ற நான் அருகில் கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து பாட்டியின் தலையில் போட்டு கொலை செய்தேன். அதன் பிறகு அவர் அணிந்திருந்த ஒரு பவுன் வளையல் மற்றும் மோதிரம் ஆகியவற்றைக் கழட்டிக்கொண்டு வெளியூருக்குத் தப்பிச் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது நீங்கள் பிடித்துவிட்டீர்கள்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சல்மானுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்த போலீசார் இருவரையும் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 45 கிராம் உருக்கிய தங்க கட்டிகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மது குடிக்கப் பணம் தர மறுத்த தனது பாட்டியைக் கல்லால் அடித்து பேரன் கொலை செய்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.