
கரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லக் குறையத் துவங்கியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
அந்தவகையில், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமுடக்கம் நடைமுறையிலிருந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி வரும் 6ம் தேதி தான் தமிழகத்துக்கு வரும் என்பதால் ஜூன் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.