பெரம்பலூர் மாவட்டம் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி ஜானகி(70). இவர்களுக்கு செல்வி, சகுந்தலா, புஷ்பவள்ளி என்ற மூன்று மகள்களும், வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இவர்கள் நால்வருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் ஜானகி தங்கள் குடும்ப சொத்துக்களை 5 பாகங்களாக பிரித்து, அதில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்கொண்டு, மீதமுள்ள நான்கு பாகத்தை மகளுக்கும் மகனுக்கும் முறைப்படி எழுதிக்கொடுத்துள்ளார். இதில், அரியலூர் அருகில் உள்ள மேல் உசேன் நகரத்தில் வசிக்கும் ஜானகியின் மகள் சகுந்தலாவின் மகன் மணிமாறன்(26) பாட்டி ஜானகியிடம் சென்று சொத்தை முறையாக பிரித்துக் கொடுக்கவில்லை என்று தகராறு செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜானகியிடம் சென்ற மணிமாறன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்பொழுது பாட்டிக்கும், பேரனுக்கும் வாக்குவாதம் முற்றவே மணிமாறனும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஜானகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜானகியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஜானகி அங்கு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாட்டியை கொலை செய்த மணிமாறன் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.