உலகத்தையே உலுக்கி வருகிறது கரோனா வைரஸ். லட்ச கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியுள்ளது கரோனா. இதனால் தமிழகத்தில் மார்ச் 31ந்தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 15ந்தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
இதனால் இந்தியா முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எதுவும் கிடைக்காதபடி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் ஏழை எளிய மக்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர், அவர்களின் வாழ்வாதாரத்துக்காக ஒரு குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்தது. மக்கள் வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த தொகை எப்படி வழங்கப்படும் என்கிற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள தகவலில், ஒவ்வொரு நியாயவிலைக்கடை ஊழியர் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே ஆவணங்களுடன் நேரடியாக வந்து ஆயிரம் ரூபாய் பணத்தினை தருவார்கள். அதனை அவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். இதனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நியாய விலைக்கடையில் பொருட்கள் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை எப்போது வேண்டுமானாலும் சென்று வாங்கலாம், கூட்டமாக இருக்கும்போது கடைக்கு செல்லாமல் தனித்தனியாக நின்று வாங்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.