உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று ஜம்மு - காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் நீதிபதி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி மகாதேவனுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பொறுப்பு வகித்த வந்த ஸ்ரீராம்-ஐ சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.