வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்பார்வையற்ற தம்பதியர் ராமதாஸ் - விசாலாட்சி. இவர்கள் நேற்று வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். பேருந்து பள்ளிகொண்டா வந்தவுடன் இருவரும் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு முன் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் விசாலாட்சி நிலைதடுமாறி பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கு இருந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
உடனடியாக அரசு பேருந்து நடத்துநரிடம் ராமதாஸ் மற்றும் பொதுமக்கள் கேட்டதற்கு அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார். அது மட்டுமின்றி கண்பார்வையற்ற ராமதாஸிடம் தினந்தோறும் இந்த பேருந்தில் மட்டும்தான் வருவீர்களா? வேற பேருந்து தங்களுக்கு கிடையாதா? என அலட்சியப்படுத்தும்படி பேசியுள்ளார்.
இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் அப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் செந்தில் மற்றும் நடத்துநர் பிரபு ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.