நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதே போன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடத்தின் போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்குத் தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான செயலாகும். அந்தவகையில் இந்த ஆண்டும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி பல்வேறு தரப்பினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து அளித்தார். இந்த தேநீர் விருந்தில் ஆளுநரின் அழைப்பை ஏற்றுத் தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் சபாநாயகர் அப்பாவு உள்ளிடோர் கலந்து கொண்டனர். தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். அதே சமயம் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.