
சென்னையில், மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று (04-03-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டார்.
அதன் பின் அவர் பேசியதாவது, “வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே வைகுண்டர் தோன்றினார். சனாதன கோட்பாட்டின் அடிப்படையில், பாரதத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அவர்களது ஒற்றுமை, கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர்கள். நமது மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றவே, அவர்கள் எல்லாம் இந்தியா வந்தனர். எனக்கு இயேசுவும் பிடிக்கும், பைபிளும் பிடிக்கும். ராமேஸ்வரம், காசி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானவை” என்று கூறினார்.