
தென்மாவட்டங்களில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (15/12/2021) விமானம் மூலம் மதுரை வந்தார். இதனை தொடர்ந்து இன்று (16/12/2021) காலை உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஆளுநர் தனது குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ்சேகர் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் கோவில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
கோவிலில் மூலவர், மீனாட்சி அம்பாள் சுந்தரேஸ்வரர் முக்குருணி விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் உள்துறை அலுவலகத்தில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆளுநர் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.