தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது; மசோதாக்களைக் கிடப்பில் போடுவது; அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், அவரே அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர், அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமூகநீதி குறித்து பேசியது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 18 வகை கைவினைக் கலைஞர்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “ பிரதமர் மோடி கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை சில அரசியல் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் அவர்கள் அந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். விஸ்வகர்மா திட்டத்தை சில பேர் குலக்கல்வி திட்டம் என்று விமர்சனம் செய்கிறார்கள். விஸ்வகர்மா தொழிலாளர்கள் இல்லை என்றால் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் வளர முடியாது. ஆனால், நம் நாட்டில் இன்னும் சில பேர் துர்திஷ்டவசமாக அரசியல் பிடியில் இருந்து அனைத்தையும் பார்க்கின்றனர்.
சமூகநீதி என்ற பெயரில் இந்த சமூகத்தை பிளவு படுத்துகிறார்கள். குறிப்பாக பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் பட்டியலின பெண் ஒருவர் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரால் பதவியேற்க முடியவில்லை என்று நான் செய்தித்தாளில் படித்தேன். பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படும் நிலையில் சிலர் இங்கு சமூகநீதியை காப்பதாக பெருமையோடு கூறி வருகிறார்கள்” என்று கூறினார்.