‘அஞ்சாத சிங்கமாம் காளையை அடக்க வந்தால் பஞ்சாகப் பறந்துவிட வேண்டியதுதான். இப்படி ஒரு ஆபத்தை தேடிவரும் மாவீரன் யாராவது உண்டா?’ கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்கள், பழைய சினிமா பாடல் ஒன்றைப் பாடி ‘கெத்து’ காட்டுவதுண்டு.
விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பில் கனகலட்சுமி என்ற மணமகள், தனது திருமணத்தின்போது, ஜல்லிக்கட்டு காளையுடன் போட்டோ எடுத்து ‘கெத்து’ காட்டவேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடந்திருக்கிறது. விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பு – அணைக்கரைபட்டியில் கனகலட்சுமிக்கும் அழகுமுனிக்கும் திருமணம் நடந்தது. மாடுபிடி வீரரான மணமகன் அழகுமுனிக்கு ஜல்லிக்கட்டு காளை என்றால் உயிர். வருங்கால கணவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்திருந்த கனகலட்சுமி, ‘ஏங்க.. நம்ம கல்யாணத்துல ஜல்லிக்கட்டு காளையை மேடையேற்றி நாமளும் சேர்ந்து நின்னு போட்டோ எடுக்கணுங்க..’ என்று தன்னுடைய ஆசையை அழகுமுனியிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். பிறகென்ன? அழகுமுனியின் நண்பர்கள் மணமகள் கனகலட்சுமியின் ஆசையைத் தெரிந்துகொண்டு, ஜல்லிக்கட்டுக் காளையை அலங்கரித்து மணமேடைக்கே அழைத்துவந்தனர். சந்தோஷத்தில் கனகலட்சுமி துள்ளிக்குதிக்காத குறைதான். மணமக்கள் இருவரும் ஆசை ஆசையாக ஜல்லிக்கட்டுக் காளையுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
நண்பனின் வாழ்க்கையில், அதுவும் திருமண நாளில் சந்தோஷம் பொங்கச் செய்த நண்பர்கள் பாராட்டுக்குரியவர்களே!