திருச்சி எஸ்.பி.ஐ.ஓ பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த எஸ்.ஜெனீபர் மற்றும் ஜி.எம்.காமினி. இவர்கள் மென்பந்து (சாப்ட் பால்) விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பரிசுகள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சரவணன் சிறப்பான பயிற்சி அளித்தார்.
இந்நிலையில் தைவான் நாட்டின் தைபே நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடும் 15 வயதிற்குட்பட்ட வீராங்களைகள் தேர்வு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடந்தது. 16 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 2 பேர் எஸ்.ஜெனீபர், ஜி.எம்.காமினி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு மென்பந்து விளையாட்டு சிறப்பு பயிற்சியாளரான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பிரசன்னகுமார் சிறப்பு பயிற்சி அளித்தார்.
தைவான் நாட்டின் தைபே நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க எஸ்.ஜெனீபர், ஜி.எம்.காமினி கடந்த 8 ஆம் தேதி திருச்சியிலிருந்து சென்றனர். தைவான் நாட்டின் தைபே நகரில் ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சாப்ட் பால் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்திய அணிக்காக திருச்சியைச் சேர்ந்த காமினி, ஜெனிபர் ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இதையடுத்து 19-ந் தேதி காலை இவர்கள் டெல்லியில் இருந்து திருக்குறள் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று இரவு திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவிகள், “நாங்கள் குறுகிய காலத்தில் இந்த போட்டியில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தைவானில் நடைபெற்ற சாப்ட் பால் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினோம். மேலும் அடுத்து வரும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும். தமிழக முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மென்பந்து (சாப்ட் பால்) போட்டிகளை மாவட்ட, மாநில அளவில் நடத்திடவும், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் ஏற்படுத்தித் தரவும் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.