Skip to main content

சேலத்தில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!: ஆட்சியர் ரோகிணி 

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
Interview


சேலத்தில் பன்றி காய்ச்சலை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.


பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கான பயிற்சி முகாம் சேலத்தில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில் இன்று நடந்தது.
 

பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளை உடனடியாக பரிசோதனை செய்து நோயின் தன்மை குறித்து ஆராய்ந்து, உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். பன்றி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும், அதுகுறித்த தகவல்களை மாவட்ட சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அரசு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

     
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் ரோகிணி கூறுகையில், ''பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கென மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தனி அறை அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களை தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும்.


பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கண்காணிக்க சேலம் மாவட்டத்தில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மையை கண்டறிந்து உடனடி சிகிச்சை அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். போலி மருத்துவர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
 

சார்ந்த செய்திகள்