மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் காபர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு ஊடுருவியுள்ளார் என உளவுத்தகவல் கசிவதால் கடலோரப் பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களை மாலத்தீவிற்கு கொண்டு செல்வது வழமையான ஒன்று. இந்நிலையில், கடந்த 11ம் தேதி கப்பல் ஊழியர்களாக 8 இந்தோனோஷியா நாட்டினரையும்1 தமிழரையும் இணைத்துக் கொண்டு கருங்கற்களை ஏற்றி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு புறப்பட்டது விர்கோ 9 என்ற பார்ஜியா வகையிலான சிறு கப்பல். அங்குக் கருங்கற்களை இறக்கி வைத்துவிட்டு கடந்த 27ம் தேதி அங்கிருந்து புறப்பட்ட விர்கோ 9 இன்று தூத்துக்குடி அருகில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட, அக்கப்பலில் ஊழியர்கள் 9 நபர்களுடன் கூடுதலாக 1 நபர் இணைந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சோதனை நடைப்பெற்று வருகின்றது.
ஐ.பி.,ரா, கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறையினர் விசாரணையில் அந்த 10வது நபரின் பெயர் அகமது அதீப் காபர் எனவும், மாலத்தீவின் 33 ஆண்டுகால சிறைத்தண்டனைக் கைதியான அவர் அந்நாட்டின் துணை அதிபராக இருந்தவர் எனவும் தெரிகின்றது. இவர் மாலத்தீவின் அதிபராக இருந்த யாமின் கயூமை கொல்ல முயன்றது தொடர்பாக 4 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கலாம் என்கின்றது உளவுத்துறை.