Skip to main content

’’இந்த அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாமா வேலை பார்க்கிறது! ’’- பட விழாவில் கொந்தளித்த வேல்முருகன் 

Published on 22/05/2018 | Edited on 23/05/2018
tau

 

 

இயக்குனர் அமீர், நடிகர்கள் விதார்த், அருள்தாஸ், சவுந்தர பாண்டியன், விஷ்வாந்த் ஆகியோர் நடித்துள்ள 'தடை அதை உடை' என்ற  இசை ஆல்பம் இன்று வெளியானது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த இசை ஆல்பத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வேல்முருகன் பேசியது...

 

’’நேற்று முன் தினம் என் மீதும், பழ. நெடுமாறன், சீமான் உள்ளிட்ட 27 தோழர்கள் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொண்டர்கள் மத்தியில் எங்கேயோ ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு குற்றவாளியாக அறிவிக்கிறார்கள். இது எல்லாம் ஏற்புடைய செயல் அல்ல. தூத்துக்குடியில் இன்று துப்பாக்கிச் சூட்டை  நடத்தியிருக்கிறார்கள். அறவழி, அமைதி போராட்டத்திற்கு உச்ச நீதிமன்ற தடை கோருகிறார்கள், மதுரை உயர்நீதிமன்றம் மறுக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். நள்ளிரவில் 144 தடை விதித்து போராட்ட உணர்வை சிதைக்கிறார்கள். கதிராமங்களத்தில் 365 நாட்களாக அமைதி அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு  மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 27 நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

 

இன்றைக்கு அந்தப் போராட்ட களத்தில் நான் கலந்து கொள்வதாக இருந்தது. தடையின் காரணமாக வெளியில் தலைவர்கள் யாரும் போகவில்லை. அந்தத் தடையை நாங்க மதிக்கிறோம். உள்ளூர் மண்ணின் மைந்தர்களை ஆண்டாண்டு காலமாக போராடுகிற மக்களை தடைவிதிப்பதற்கு உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தது? ஒரு தனிநபருக்காக ஒரு தனி முதலாளிக்காக உயர் நீதிமன்றம் மறுத்த பிறகு அரசு தடை விதித்து இருக்கிறது. உயர்நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. உயர்நீதிமன்றம் தடைவிதித்தால் நாங்கள் கட்டுப்படுவோம். வேண்டுமென்று திட்டமிட்டு பன்னாட்டு முதலாளிகளிடம் பல கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்  கொண்டு போராடுகின்ற மக்களை தடி கொண்டு அடித்து, மண்டையை உடைத்து, கை, கால்களை உடைகின்ற இந்த ஆணவ, அராஜக காவல் துறைக்கு மக்கள் மிக விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

 

t2

 

நாங்கள் தொடர்ந்து போராடித் தான் காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து இருக்கிறோம். தொடர்ந்து எல்லோரும் போராடி ஜ.பி.எல்.-ஐ நிறுத்திருக்கிறோம். தொடர்ந்து போராடித் தான் go back modi trending ஆக்கிருக்கிறோம். சொந்த நாட்டு மக்களே சொந்த நாட்டு பிரதமரை இந்த நாட்டுக்கு வரமால் தடுத்து இருக்கிறோம். அப்போது ஒரு அரசு சுயமரியாதை,தன்மானம், இருக்கு என்று சொன்ன பிரதமரை தரைவழி மார்க்கமாக வரவிடமால் வான்வெளி மார்க்கமாக வரவிட்டார்களே.  இந்திய நாட்டு பிரதமர் இதை அவமானமாக உணர வேண்டும். ஆகவே அரசுக்கு வெட்கம், மானம், சுடு, சுரணை, ரோஷம் எதுவும் இல்லை. காவல் துறையைக்கொண்டு ராணுவத்துறையை கொண்டு கதிரமங்களத்தை ஒடுக்கி வருகிறார்கள். எங்கே அரசு பயங்கரவாதம் காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு அடக்க  நினைத்தாலும் அது அடங்கியதாக எந்த வரலாற்றிலும் இல்லை.

 

நாங்கள் கேட்டது காவிரி மேலாண்மை வாரியம். ஆணையம் அல்ல. பல் இல்லாத, அதிகாரம் இல்லதா ஆணையம் இல்லை. ஆனால் அந்த ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அந்த ஆணையத்தில் கூட நடுவர் உச்சநீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நிகராக அதிகாரமற்ற ஆணையமாக அது அமைக்கப்படுகிறதா? இல்லையா? இந்த ஆணையத்தின் தீர்ப்பை கர்நாடகம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த போகிறதா? இல்லையா? என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. ஏன் உச்சநீதிமன்றத்தின் நீதி அரசர்கள் இந்த ஆணையத்தின் உத்தரவை மதிக்கவில்லை என்று சொன்னால் அதை நடைமுறைப்படுத்த கூடிய அதிகாரம் இந்த ஆணையர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? ஆனால் அவர்கள் திறந்துவிடவில்லை என்றால் மத்திய அரசிடம்  போ என்கிறார்கள். மத்திய அரசுதான் எங்களுக்கு தண்ணியே தரமாட்டேன் என்கிறார்கள். இது தமிழர்களுக்கான தீர்ப்பா?

 

சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்துகிறவர்கள் எல்லோர் மேலயும் வழக்கு போடுவார்களா? சுங்கச்சாவடியில் வேல்முருகன் கடப்பாறையில் குத்தினால், ஓங்கி அடித்து உடைத்தார் என்று போடுகிறீர்கள். நான் காரில் உட்கார்ந்து இருக்கிறேன். எதற்கு இந்த பொய் வழக்கு போடுகிறார்கள்? இதை கேட்க ஒரு ஊடகம் ஒரு பத்திரிக்கை இல்லை?

 

ராமேஸ்வரத்தில் நீட் என்கிற கை விலங்கு போட்டு ஒரு திறந்தவெளி காந்தி சிலையில் உட்கார்ந்துகொண்டு நீட் என்பது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மாணவர் செல்வங்களுடைய மருத்துவ கல்வி கனவை நாசமாக்கற பொசுக்குகிற மோசமான நீட்.  அது கூடாது என்பதற்க்காக அந்த நீட் என்னும் விலங்கு உடைக்கப்பட வேண்டும் என்பதற்காக கந்தசாமி உயிரிழந்த காரணத்தினால் நாங்கள் அமைதிவழி போராட்டம் கேரளாவில் நடத்தினோம். அவர்களை பிடித்து என் கட்சி தொண்டர்களை 15 நாள் சிறையில் வைத்திருக்கிறார்கள். என்ன அரசாங்கம் இது? ஆகவே இந்த அரசு என்பது ஒரு அடுக்கு முறை அரசு, ஒரு கொடுங்கோல் அரசு, காவல்துறையை கொண்டு ராணுவத்தை கொண்டு போராடுகின்ற மக்களை பொய் வழக்குபோட்டு சிறை பிடித்து அதன்மூலமாக இன்றைக்கு பண்ணாட்டு நிறுவனங்களுக்கு ஒரு மாமா வேலை பார்க்கிறது. இதை எப்படி நாங்க பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியும்?. நாங்கள் அனைத்து கட்சிகளும் மற்றும் இந்த இயக்குநர்களும் சேர்ந்து தலைமை செயலாளரை சந்திக்க போகிறோம். சந்தித்து,  ஜனநாயக படுகொலை பற்றியும், தமிழக மக்களின் மீதான தடியடி, பொய்வழக்கு இவற்றையெல்லாம் சொல்லுவோம். மீண்டும் அவர்கள் இதையே செய்வார்கள் என்று சொன்னால் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம்.’’
 

சார்ந்த செய்திகள்