வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை என்கிற இடத்தில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கிவருகிறது. இங்கு 14.5 கோடி ரூபாய் செலவில் 5 புதிய சிகிச்சை பிரிவுகள் மற்றும் பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் போன்றோர் கலந்துக்கொள்வர் எனக்கூறப்பட்டிருந்தது. அதோடு, இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பெயர்களை அச்சடித்த அரசு அழைப்பிதழ் சம்மந்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 1ந்தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவமனை உள்ள ஊர் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்டதாகும். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு திமுக மத்திய மா.செவும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவுமான நந்தகுமார் சென்றிருந்தார். வழிநெடுங்கிலும் ஆரம்பரமாக வரவேற்பு பதாகைகள், கட்அவுட்கள், வளைவுகள் என அமர்களப்படுத்தியிருந்தனர். இவைகள் அனைத்திலும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள், படங்கள் மட்டுமே இருந்தது. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களின் படங்களோ, பெயர்களோ கிடையாது. தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் நந்தகுமார் பெயரும், படமும் கிடையாது.
நிகழ்ச்சிக்கு வந்தவர் எதற்காக இப்படியொரு ஆடம்பர விழா எனக்கேள்வி எழுப்பினார். தெரியாம நடந்துடுச்சி விடுங்க என வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி, எம்.எல்.ஏ நந்தகுமாரை கையை பிடித்துக்கொண்டு சமாதானம் செய்தார். அரசு விழா நடக்குது, என் தொகுதியில் நடக்கும் விழாவில் எம்.எல்.ஏ என்கிற முறையில் எனக்கு என்ன மரியாதை செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதனால் அமைச்சர் சங்கடத்தில் நெளிந்தார். இதனால் விழாவை புறக்கணித்துவிட்டு நந்தகுமார் கிளம்பிவிட்டார்.
அவர் சென்றபின் நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களிடம், இந்த தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில் இந்த மருத்துவமனைக்கு சிறு துரும்பும் கிள்ளி போடாதவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் பத்து பைசா இந்த மருத்துவமனைக்காக செலவு செய்யாத எம்.எல்.ஏ நந்தகுமார், விளம்பரத்துக்காக இங்கு வந்து பேசிவிட்டு சென்றுள்ளார் என பேட்டியளித்துவிட்டு சென்றார்.
இந்த தகவல் நந்தகுமாரை எட்டியதும் கோபமாகியுள்ளார். நான் அந்த மருத்தவமனைக்கு எதுவும் செய்யலன்னு இவர் எப்படி சொல்லலாம், நான் செய்ததை ஆதாரத்தோடு சொல்கிறேன். அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாரா என சவால் விட்டுள்ளார் என்றார்கள் திமுக தரப்பில்.
இதுப்பற்றி நந்தகுமார் எம்.எல்.ஏவிடம் நாம் கேட்டபோது, என் தொகுதிக்கு உட்பட்ட அடுக்கம்பாறை என்கிற ஊரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 27 லட்ச ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பொதுமக்கள் ஓய்வு அறை கட்டி தந்துள்ளேன், இதனை சில மாதங்களுக்கு முன்பு தான் மருத்துவர்களோடு சேர்ந்து திறந்துவைத்தேன். இதுப்பற்றி ஒன்றும் அறியாத அமைச்சர் சவால் விட்டுள்ளார். இதுப்போல் இன்னும் சிலவற்றையும் செய்துள்ளேன், அவைகளை பட்டியலிடுகிறேன், நான் எதுவும் செய்யவில்லை எனச்சொன்ன மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா எனக்கேட்டவர், மாவட்டத்தில் என்ன நடக்குதுன்னே தெரியாமா, வாய்ல வந்ததையெல்லாம் பதவியில் இருப்பவர் பேசக்கூடாது என்றார் சூடாக.
கேள்வி கேட்காமல் ஒளிப்பரப்ப ஆளும்கட்சிக்கு சாதகமாக மீடியாக்கள் உள்ளது என்பதற்காக வாயில் வந்ததையெல்லாம் பேசிவிட்டு இப்போது மாட்டிக்கொண்டார் மந்திரி.