கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள முருகன் குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 60 பேர் படித்து வந்த நிலையில், தற்போது 225 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் எட்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் மொத்த பரப்பளவு 3000 சதுர அடிக்கும் குறைவாக இருப்பதன் காரணமாகப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்ட முடியவில்லை. தற்பொழுது ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பறை கட்டிடம் உள்ளது. ஏழு மற்றும் எட்டு வகுப்பு மாணவர்களுக்குத் திறந்த வெளியில்தான் பாடம் நடத்தப்படுகிறது. மேலும் 35 ஆண்டுகளாக இந்த பள்ளிக்குக் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் 200 மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம், விளையாட்டு, கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த வருடம் ஓவியப் போட்டிக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்பள்ளியின் ஆசிரியர்கள் தனியார்ப் பள்ளிகளை விடக் கூடுதல் கவனம் செலுத்தி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இந்த பள்ளியில் படித்தவர்கள் தற்போது சட்டம், வேளாண்மை, ஆசிரியர் பணி, குடிமைப் பணி மற்றும் அரசியல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, முருகன்குடி தாய் பள்ளி வளர்ச்சி குழு, பள்ளி மேலாண்மை குழு, திருவள்ளுவர் தமிழர் மன்றம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் என இப்பள்ளியின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை இப்பள்ளியின் ஆசிரியர்கள் தமது ஊதியத்திலிருந்து ஒரு பகுதியினை செலவு செய்து சீரமைத்து உள்ளனர். இந்த பணி என்பது மகத்தானது பாராட்டுக்குரியது என ஊர் மக்கள் அந்த ஆசிரியர்களைப் பாராட்டுகின்றனர். அதே சமயம் பள்ளிக்குத் தேவையான கட்டிட வசதிகளைச் செய்து கொடுக்கவும், கழிவறை வசதிகளைச் செய்து கொடுக்கவும் அரசுக்கு ஊர் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.