புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 18 பேருக்கு எம்.பி.பி.எஸ் படிக்கவும், ஒரு மாணவருக்கு பி.டி.எஸ் படிக்கவும் இடம் கிடைத்தது. தற்போது அவர்கள் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சண்முகம் வந்த பிறகு 28 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் 5 மாணவர்கள் பி.டி.எஸ் என 33 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 5 ஆம் தேதிக்குள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர தயாராகி வருகின்றனர்.
இதில் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டுகளில் படித்த ஆர்த்தி, சுபஸ்ரீ, ஜெயந்தி, கடல்வேந்தன் ஆகிய 5 பேருக்கும் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அதே போல ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து சாதித்து வரும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இந்த ஆண்டும் தொடர் சாதனையைத் தக்க வைத்துள்ளனர்.
அதாவது, ஒரே பள்ளியில் இருந்து சுவேதா, புவனா, அபிநயா ஆகிய 3 மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கவும், சதா என்ற மாணவிக்கு பி.டி.எஸ் படிக்கவும் என 4 மாணவிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். மேலும் இந்த கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 7.5% உள் இட ஒதுக்கீடு வந்த பிறகு கடந்த ஆண்டுகளில் 19 மாணவிகள் மருத்துவம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே போல ஆவுடையார்கோயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து முதல்முறையாக திவ்யதர்ஷினி, சிவராஜா, ஹரிநந்தா ஆகிய 3 பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் இருந்து 32 மாணவ, மாணவிகள் தேர்வாகி உள்ள நிலையில் மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வில் 633 மதிப்பெண்கள் பெற்று 7.5% உள் இட ஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் தருண் நம்மிடம் பேசும் போது, “எங்கள் ஊரு வடகாடு கீழஇடையர் தெரு. வீட்டில் பெற்றோர் பரமசிவம் - வள்ளியம்மா விவசாய கூலி வேலை செய்றவங்க. கொஞ்சம் நிலம் இருக்கிறது விவசாயம் செய்றோம். இப்ப கூட அம்மா நூறு நாள் வேலைக்கு போயிட்டாங்க. அவங்க கஷ்டப்பட்டாலும் தங்கள் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கனும்னு அண்ணன் கருப்பையா, அக்கா பிரியதர்ஷினி இருவரையும் எம்.எஸ்.சி படிக்க வச்சுட்டாங்க.
நான் வாணியத்தெரு தொடக்கப்பள்ளிக்கே சரியா போகமாட்டேன் ஆனா எங்க டீச்சர் வந்து கூட்டி போயிடுவாங்க. அப்பறம் மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில சேர்ந்த பிறகும் சுமாரான மாணவன் தான். 7.5% இட ஒதுக்கீடு வந்த வருடம் எங்க பள்ளியில் படிச்ச காயத்திரின்னு ஒரு அக்கா டாக்டர் சீட்டு கிடைச்சு படிக்க போயிட்டாங்க. அப்பறம் ஒரு அண்ணன் போனார். அவங்களைப் போல நாமளும் டாக்டர் ஆகனும் என்ற ஆசை இருந்தது. ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தினாங்க. அப்பாவும், அம்மாவும் உற்சாகப்படுத்தினாங்க. போன வருசம் +2 படிச்சுட்டு நீட் எழுதினேன். குறைவான மார்க் கிடைச்சது. ஒரு வருசம் கோச்சிங் சென்டர் போய் படிச்சேன் இப்ப 633 மார்க் வாங்கி மாவட்டத்தில் புதல் மதிப்பெண் என்ற பெருமையும் கிடைச்சது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் படிக்க சீட்டும் கிடைச்சிருக்கு. எங்க மாமா மணிகண்டன் உள்பட பலரும் ஊக்கம் கொடுத்தது உதவியாக இருந்தது.
முழு விவசாய குடும்பம் என்பதால் பள்ளிக்கூடம் போகிறதுக்கு முன்னாலயும், பள்ளி முடிந்து வீடு வந்துட்டாலும் ஆடு, மாடுகளை மேய்க்கனும். இரவில் தான் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 7.5% உள் இட ஒதுக்கீடு தான் என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவர்கள் ஆக வசதியாக உள்ளது” என்றார்.