கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இது அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கல்வி பயின்று வரும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியின் அருகில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் விடுதியை சரியாக பராமறிப்பது இல்லையென்றும், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் பேரில் அவர் செவ்வாயன்று விடுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல அறைகளில் கதவு, ஜன்னல்கள் உடைந்து சுகாதரமற்றநிலையில் இருந்தது. மேலும் விடுதியில் மாணவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் அனைவரும் திறந்த வெளியில்தான் இயற்கை உபாதைகளை கழித்து வருகிறார்கள் என்பதை அறிந்த ஆட்சியர் விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். மேலும் சமையல் பொருட்கள் வைப்பு அறை மற்றும் சமையல் அறை, சாப்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்துவிட்டு எதுவும் சொல்லகூடிய வகையில் இல்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவருடன் சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், வட்டாட்சியர் ஹரிதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதேபோல் கிள்ளை அருகே நடைபெறும் புதிய பாலம் கட்டும் பணிகள், சிதம்பரம் நகரையொட்டி ஓடும் கான்சாகிப் வாய்கால் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.