ஜாக்டோ - ஜியோ போராட்டப் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும், பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிச்செட்டிபாளையம் கோட்டத்திற்குட்பட்ட தாலுக்கா அலுவலகங்களில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட வருவாய்துறையினர் நேற்று (27/01/2021) ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் ஜாக்டோ - ஜியோ போராட்டப் பாதிப்புகளை சரி செய்யவேண்டும், பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி வரன்முறை ஏற்படுத்த வேண்டும், தகுதியுள்ளவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடு கலையப்பட வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும், பதிவறை எழுத்தர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற 19.01.2021 அன்று அனைத்து மாவட்டங்களிலும் பெருள்திரள் முறையீடு செய்தல், அதனைத் தொடர்ந்து நேற்று (27/01/2021) ஒட்டுமொத்தமாக ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிந்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்று (27/01/2021) தமிழகம் முழுவதும் உள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, பெருந்துறை சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் என வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தாலுக்காக்களில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் இருக்கைகள் காலியாக இருந்தன. வருவாய் துறை வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. வருவாய்த் துறையினரின் போராட்டத்தை அறியாத பொதுமக்கள் அலுவலகங்களுக்கு வந்து சான்றிதழ்கள் கிடைக்காமலும், பணிகள் முடிவடையாமலும் திரும்பிச் சென்றனர்.
இப்போட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லையெனில், அடுத்தக் கட்டமாக 06/02/2021 அன்று சேலத்தில் பேரணி மற்றும் கோரிக்கை மாநாடு நடத்தப் போவதாகவும், 17/02/2021 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.