சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் ராமநாதபுரத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அரசு அதிகாரியான கண்ணன் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதையடுத்து, களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறையினர், அரசு அதிகாரியான கண்ணனுக்கு நாள் குறிக்க தொடங்கியுள்ளனர். கண்ணன் எங்கெல்லாம் செல்கிறார்? யாரையெல்லாம் சந்திக்கிறார்? என அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், கண்ணன் கடந்த 6 ஆம் தேதியன்று ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகை அறையில் தங்கியிருந்தார்.
அப்போது, திடீரென உள்ளே நுழைந்த டிஎஸ்பி ஜான் பிரிட்டோ தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கண்ணன் தங்கியிருந்த அறை மற்றும் அவரது வாகனம் ஆகியவற்றில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 32 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவை அனைத்தையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கண்ணன் வசித்து வரும் வீட்டிற்கும் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த சோதனையிலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பொதுப்பணித்துறை செயற்பொறியாளரான கண்ணன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.