தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கணக்கீட்டாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு தமிழ்பாடத்தை தவிர அனைத்து பாடங்களுக்கும் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியடப்பட்டது. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களை புறந்தள்ளுவது போல் உள்ளது என ஆதங்கத்துடன் கூறினார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்கள்.
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் உட்பட பல அமைப்பு நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பிறகு அவர்கள் கூறும்போது, "தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கணக்கீட்டாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு நம் தமிழகத்தில் படித்து வேலை இல்லாத லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தநிலையில் தற்போது அதற்கான தேர்வு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தை தவிர அனைத்தும் ஆங்கிலத்திலேயே வினாத்தாள்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் கிராமப்புற மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவில் புதிய நடைமுறையை தேர்வு நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதனால் தமிழ் வழியில் படித்தவர்கள் கிராமப்புற ஏழை எளிய பட்டதாரிகள் ஆங்கிலத் தேர்வு எழுதுவது என்பது உண்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆங்கில வழியில் நடத்தவிருக்கும் தேர்வை ரத்து செய்து விட்டு தமிழ் வழியிலேயே தேர்வு நடத்த வேண்டும் என இந்த அரசை கேட்டுக் கொள்கறோம். மாவட்ட கலெக்டர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்" என்றனர்.