நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் திறந்த வாகனத்தில் நின்று கீரமங்கலத்தில் வாக்குகேட்டு பேசுகையில், 'நாட்டின் கனிம வளங்கள் எல்லாம் கொள்ளை போய்விட்டது. ஆற்றில் தண்ணீர் ஓடி ஊற்றில் தண்ணீர் குடித்த காலம் மாறிப் போய் பாட்டிலில் தண்ணீர் வாங்கி குடிக்கிறோம்.
நிலத்தடி நீரை, ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை உறிஞ்சும் தைல மரக்காடுகளை அரசாங்கமே வளர்க்கிறது. ஒட்டு மொத்த கனிம வளங்களும் காணாமல் போகிறது. எதிர்கால நம் பிள்ளைகளுக்கு என்னத்தை விட்டுச் செல்லப் போகிறோம். வரி வசூலிக்கும் அரசாங்கம் மக்களுக்கு கல்வி, மருத்துவம், கொடுக்க வேண்டும் ஆனால் நம்மிடம் வரியும் வாங்கிக் கொண்டு கல்வி மருத்துவத்தையும் நம்மிடமே விற்க அனுமதிக்கிறது. நம்மிடம் வரி வசூல் செய்து சாலை போட்டுவிட்டு பிறகு டோல் போட்டு அதற்கும் வரி வசூல் நடக்கிறது. இந்தநிலை மாற வேண்டும்'' என்றார்.