இடைப்பாடி அருகே, அரசின் அனுமதியின்றி தனியார் பட்டா நிலத்தில் கற்களை வெட்டிக் கடத்த முயன்ற கும்பலை தடுக்கச் சென்றபோது, வருவாய்த்துறை அலுவலர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் சமுத்திரம் பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் கற்கள் வெட்டி டிராக்டர் மூலம் கடத்தப்படுவதாக இடைப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில், சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) குமார், தாதாபுரம் விஏஓ சுரேஷ் ஆகியோர் நிகழ்விடம் விரைந்தனர். அங்கு கற்கள் வெட்டிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், விஏஓக்கள் இருவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கற்கள் கடத்தும் கும்பல், அலுவலர்களை சரமாரியாக தாக்கினர். மீண்டும் இந்தப் பக்கம் வந்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என்றும் மிரட்டினர்.
இதற்கிடையே, சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் நிகழ்விடத்திற்கு ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்ததும், கற்களை வெட்டி கடத்தும் கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பலத்த காயம் அடைந்த விஏஓக்கள் இருவரையும் பொதுமக்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விஏஓ குமார், கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், சமுத்திரத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், மணிகண்டன், செந்தில் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து குமாரை தாக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.