திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த அரசு கேபிள் டிவி நிறுவன ஊழியர் தர்மேந்திர சர்க்கார் தனது மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அம்மைய நாயக்கனூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பொட்டிசெட்டிபட்டி பிரிவு அடுத்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் வாகனத்தில் பயணம் செய்த மூவரும் கீழே சாலையில் விழுந்தனர். அதே நேரத்தில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, தர்மேந்திர சர்க்கார் மீது ஏறி அவர் உடலை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றது. இச்சம்பவத்தில் தர்மேந்திர சர்க்கார் உடல் துண்டாகி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மேந்திர சர்க்கார் இருசக்கர வாகனத்தில் தனது குடும்பத்தினருடன் சாலையில் செல்லும்போது பின்னால் வந்த காரில் இருந்த டேஸ்கேம் கேமராவில் பதிவான காட்சிகளில், வாகனத்தில் செல்லும் தர்மேந்திர சர்க்கார் சாலையில் இருந்த தடுப்பில் மோதி கீழே விழுவதும் பின்னால் வந்த கண்டெய்னர் லாரி அவர் மீது ஏறி இழுத்துச் செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.