விருதுநகரில் கிராமம் ஒன்றில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பெண்களை ஏற்றாமல் சென்றதாக புகார் எழுந்த நிலையில் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக பேருந்து ஒன்று இயங்கி வருகிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி பெண்கள் இலவசமாக பயணிக்கும் பிங்க் வண்ண அரசு பேருந்தில் பெண்களை ஏற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்தது. மேலும் அந்த வழியில் பெண்கள் நின்றால் அவர்களை ஏற்றிச் செல்லாமல் வேகமாக பேருந்து சென்று விடுவதாகவும் அந்தப் பகுதி பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்களை ஏற்றிச் செல்ல அலட்சியம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த பெண்கள், பேருந்து காரைக்குளம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வரும் பொழுது ஊரணிப்பட்டி பேருந்து நிறுத்தத்தின் அருகே பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது வந்த பேருந்தை சிறைபிடித்த பெண்கள் 'ஏன் எங்களை பார்த்ததும் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக எடுத்துச் சென்றீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.