
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் கணவர் கோவிந்தன். இவர் திமுக நகரத் துணை செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் சங்கராபுரம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் பைப் லைன் புதைக்கும் பணியின் போது ஏற்பட்டதகராறின் காரணமாக கோவிந்தனை, அந்த பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வல்லரசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து தொடர் குற்றச்சம்பவத்தில் ஈடுபடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில் வல்லரசை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.