தன்னுடைய தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க, அங்குப் பணியாற்றும் ஊழியரோ, "இறப்பு சான்றிதழ் வேண்டுமாயின் ரூ.5000 வேண்டும்” என பேரத்தைத் துவக்கி ரூ.1000-த்தில் பேரத்தை முடித்துள்ள வீடியோ வைரலாக வாட்ஸ் ஆப்பிள் பரவுவதால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலையை எள்ளி நகையாடியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் நாரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய தந்தை சுப்புலு கடந்த 2011-ம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்துள்ளார். அப்பொழுது இறப்பு சான்றிதழை வாங்க மறந்துவிட்ட நிலையில், தற்பொழுது மாரிமுத்துவின் மகனான ஒண்டிவீரன் தன்னுடைய தாத்தா சுப்புலுவிற்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்க, அப்பொழுது இறந்த சுப்புலுவின் இறப்பு சான்றிதழ் தேவைப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 23.07.18 அன்று தன்னுடைய தாத்தாவின் இறப்பு சான்றிதழ் கேட்டு அதற்கான முறையான விண்ணப்பங்கள், நாளிதழ் ஒன்றில் விளம்பரம் எல்லவாற்றையும் இணைத்து சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், சான்றிதழ் கிடைக்கவில்லை. இவ்வேளையில் அங்கு பணி செய்யும் நாசர் என்பவர், "காலதாமதம் ஆயிற்று, உங்களுக்கும் வீட்டைக் கட்டியாகனும். இப்படியே இருந்திங்கீனா ஒரு சான்றிதழும் வாங்க முடியாது. ரூ.5000-த்தைக் கொடுங்க இறப்பு சான்றிதழ் உடனே தார்றேன்" என பேச்சை துவங்கியிருக்கின்றார். அவருடைய செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த மாரிமுத்து, "எங்களால் அவ்வளவு தரமுடியாது" என சம்பந்தப்பட்ட ஊழியர் நாசரிடம் பேச்சுக் கொடுக்க, அவரோ ரூ.1000-த்திற்கு பேரம் படிந்து இறங்கி வந்துள்ளார். இப்பணத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ளே ஆவின் பாலகத்தில் அவர் வாங்கி சென்ற நிலையில் அனைத்தும் வீடியோ படம்பிடிக்கப்பட்டு வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றது.
"லஞ்சம் கேட்கிறாங்க என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறினேன். இவ்வளவு சின்னத் தொகைக்கெல்லாம் நாங்க வரமுடியாதுன்னு கூறிட்டாங்க கோவில்பட்டியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் சான்றிதழ் பெற ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதனை வெளிப்படுத்தத் தான் இந்த வீடியோ யோசனையை கையிலெடுத்து வாட்ஸ் ஆப்பிள் விட்டேன்" என்றார் மாரிமுத்து. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.