தமிழக - கர்நாடகா எல்லையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதை பொருத்து தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறப்பு அதிகமாகும் அல்லது குறையும். கடந்த பத்து நாள்களாக கர்நாடகாவில் மழைப்பொழிவு இல்லாததால், தமிழகத்திற்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது. நீர் வரத்து சரிவு மற்றும் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. இதையொட்டி தமி-ழகத்திற்கு காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு 10396 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று (அக். 10) மாலையில் 24169 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீரும், மேற்கு கால்வாய் வழியாக 700 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.97 அடியாக இருந்தது. நீர் இருப்பு 88.71 டிஎம்சி ஆக உள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.