திருவண்ணாமலை நகரத்தில் ஜீன் 2 ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு இடி, மின்னலுடன், இரண்டு மணி நேரம் பெரும்மழை பெய்யத்துவங்கியது. மழை விட்டதும் அங்கங்கு ஒதுங்கியிருந்த சிலர் அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது காந்தி சிலை அருகில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மலிவான விற்பனை செய்யும் கடைக்குள் இருந்து கரும்புகை வருவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையின் உள்ளே தீ பற்றி எரிவது உற்று நோக்கியவர்களுக்கு நன்றாக தெரிந்தது. உடனே அவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். அங்கிருந்தவர்கள் உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு அருகில் இருந்த சிறார்களுக்கான சைக்கிள் விற்பனை கடை, விவசாயத்துக்கு, குடிநீர்க்கு தேவையான மோட்டார், பைப் கள் விற்பனை செய்யப்படும் கடைகள், கண் கண்ணாடி கடை என 4 கடைகளில் அடுத்தடுத்து தீ பற்றி எரியத்துவங்கின. இந்த கடைகளுக்கு பின்னால் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த பெரிய குடோன்குள்ளும் தீ பரவி அதுவும் எரியத்துவங்கின. உள்ளிருந்த கண்ணாடி பொருட்கள் வெடித்து சிதறின. கடை பூட்டியிருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் உதவியுடன் கதவை உடைத்து அதன்பின் தீயை அணைத்தனர்.
தீயணைப்புத்துறையின் இரண்டு வாகனங்கள் மட்டுமே வந்து தீயை அணைக்க துவங்கின. கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வந்தால் தீயை அணைத்திருக்கலாமே என காவல்துறை அதிகாரிகள் கேட்டபோது, மற்ற வாகனங்கள் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது, அதனை கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லை என்றனர் தீயணைப்பு அதிகாரிகள். இதனால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. நகராட்சி மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் தண்ணீரை கொண்டுவந்து தீயணைப்பு வாகனங்களில் நிரப்பியபடி இருந்தன. சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விடியற்காலை 3 மணி அளவில் தீ அணைக்கும் பணி முழுமையாக முடிவடைந்தது. மழை பெய்ததால் தீ விபத்தை இன்னும் பெரியளவில் பரவாமல் கட்டுப்படுத்த முடிந்தது.
இந்த விபத்து மூலமாக தோராயமாக சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியுள்ளன என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள். தீ விபத்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மையத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதற்குள் எப்படி விபத்து ஏற்பட்டது?, இது விபத்தா? சதியா? என திருவண்ணாமலை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்