கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அவரது நெருங்கிய தோழியும், சக மாணவியுமான சுவாதியிடம் சாட்சி விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு தொடங்கியது.
கோகுல்ராஜ் காணாமல் போனதாக சொல்லப்படும் 23.06.2015 அன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலையடிவாரத்தில் கோகுல்ராஜும், சுவாதியும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சுவாதியையும், கோகுல்ராஜையும் மிரட்டியதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் தனியாக கடத்திச் சென்றதாக தெரிய வந்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் மலையடிவாரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பதிவுகளை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி வழக்கில் முக்கிய ஆதாரமாக சேர்த்தனர். இன்று அந்த வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் புரஜெக்டர் மூலம் போட்டு காட்டி சுவாதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோகுல்ராஜை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற சவாரி காரும் நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் பார்த்த முக்கிய சாட்சி சுவாதி என்பதால், நீதிமன்றத்தில் ஏதேனும அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற முன்னெச்சரிக்கையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும், சாட்சி விசாரணையின்போது பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.