Skip to main content

ஈரோடு இடைத்தேர்தல்; 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

Published on 04/02/2025 | Edited on 04/02/2025

 

Erode by-election; 9 polling stations are tense

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. திமுக-நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக ஆகியவை இடைத்தோ்தலை புறக்கணித்துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுயேச்சைகள் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்காத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு முனைப் போட்டியே நிலவுகிறது. வேட்பாளர் அறிவித்த உடனேயே திமுக தேர்தல் பணியை தீவிரப்படுத்தியது. அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக வீடுவீடாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Erode by-election; 9 polling stations are tense

ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி 33 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த 33 வார்டுகளிலும் திமுகவினர் தங்களது பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 24-ஆம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பெரியார் குறித்த பேச்சுகள் தொடர்ந்து சர்ச்சையானது. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 11 மணி அளவில் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து தொகுதியில் உள்ள 20 மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டன. பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ஆம் தேதி சித்தோட்டில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும்.

சார்ந்த செய்திகள்