Skip to main content

“என் கோரிக்கையை ஏற்று பள்ளித் திறப்பைத் தள்ளி வைத்தது மகிழ்ச்சி” - ராமதாஸ் 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

“Glad to postpone the opening of the school to meet my request” - Ramadoss

 

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதேசமயம், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். 

 

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

 

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பத்தின் கடுமை இன்னும் தணியாததை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் ஜூன் 7-ஆம் நாள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது ஆகும்.

 

தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைப்பதாலும், வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருப்பதாலும் வெப்பம் தணியும் வரை பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கடந்த 23-ஆம் நாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். அதையேற்று பள்ளிகள் திறப்பைத் தமிழக அரசு தள்ளி வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் நலன் தொடர்பான கருத்துரைகளை செவிமடுத்து, செயல்படுத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்