திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி வினாடி- வினா போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி 'கலைஞர் 100' வினாடி - வினா போட்டிக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'தமிழினத்தின் அறிவொளியாக தன்னிகரில்லா ஆளுமையாக வளர்ந்து வழிகாட்டிய கலைஞரின் நூற்றாண்டில் திராவிட இயக்கத்தையும், தமிழ்நாடு எனும் பெரு நிலத்தையும், தமிழ் இன வரலாற்றையும் அனைவரும் அறிந்திடும் வண்ணம் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் 'கலைஞர் 100' வினாடி- வினா போட்டி மகளிர் அணி சார்பில் நடைபெற இருக்கிறது.
நமது முந்தைய களப்போராட்டங்களை; அரசியல் புரட்சிகளை; அதற்கு வித்திட்ட நமது முன்னோர்களை; நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறவும் இந்த வினாடி- வினா போட்டி பெரும் வாய்ப்பாக அமையும். பத்தாயிரம் கேள்விகளோடு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது. இந்த வினாடி வினா போட்டியில் எல்லோரும் கலந்துகொண்டு தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம், kalaingar100.co.in' என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இணையவழி போட்டிகள் தொடங்க இருக்கிறது. வரலாற்றின் தனிப்பெரும் மக்கள் இயக்கத்தை, இணையில்லா கலைஞர் நூற்றாண்டில் கொண்டாடுவோம் வாருங்கள்' என தெரிவித்திருந்தார்.
இதனையொட்டி கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில், “அறிவியக்கமாக வாழ்ந்து வழிகாட்டிய கலைஞரின் நூற்றாண்டில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் முற்றிலும் புதிய பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் முயற்சி ‘கலைஞர் 100 - வினாடி வினா’ போட்டி. செப்டம்பர் 15 அன்று துவங்கவுள்ள நிகழ்வுக்கு, இன்று முதல் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்நிகழ்வைத் துவங்கி வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு வினாடி வினா போட்டிக்கான இணையதளத்தை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.