கோப்புப்படம்
சிதம்பரம் பகுதியில் கஞ்சா போதையில் நள்ளிரவில் வீடுகளில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களில் பெட்ரோல் திருடும் இளைஞர்களால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகர், வரதராஜ நகர், தமிழன்னை நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், குருதேவ் நகர், முத்தையா நகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளது. இந்த நகரில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவர்களது வீட்டு வாசலில் அல்லது வீட்டிற்கு உள்ளே உள்ள போர்டிகோவில் அவர்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோலை திருடி செல்கின்றனர். இதனால் காலையில் எழுந்து வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலும் காலை நேரத்தில் அவசர வேலையாக வெளியில் செல்பவர்களுக்கு இது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்து அதில் ஒருவர் வீட்டின் சுவர் மீது எறி குதித்து அங்கிருந்த 2 இருசக்கர வாகனத்தில் பெட்ரோலை பிடித்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் நாய்கள் குறைத்துள்ளது. வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தபோது அவர்கள் பாட்டிலை போட்டுவிட்டு மதில் சுவர் மீது எகிறி குதித்து ஓடி 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். அப்போது வீட்டின் உரிமையாளரை மிரட்டும் தோணியில் சைகை காட்டி சென்றனர். இவர்கள் மது மற்றும் கஞ்சா போதையில் இரவு நேரத்தில் இது போன்று தொடர்ந்து சுற்றுகிறார்கள் என்றும் பல்வேறு வீடுகளில் உள்ள இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் திருடி வருகிறார்கள். இரவு நேரத்தில் போதையில் இருப்பதால் இவர்களிடம் இது குறித்து கேட்பதற்கு பொதுமக்கள் அச்சமடைகிறார்கள் எனவே காவல்துறையினர் இதை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நகரத்தில் துறவாடி தெருவில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய ஒருவர் பெட்ரோல் பிடித்துக் கொண்டு அருகே இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதேபோன்று பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.