![gas](http://image.nakkheeran.in/cdn/farfuture/Oc6LHRFNqMa9SVaUwT9G9zZ6VV-p1BQKQYsVdJDGjVA/1650000358/sites/default/files/inline-images/zzzzz424442424242.jpg)
சென்னை அடுத்துள்ள ஆவடி அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரை தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயில் அருகே சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது வீட்டில் 10 அடி ஆழமுள்ள குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை நேற்று ஆட்களை வைத்து சுத்தம் செய்த நிலையில், இன்று மீண்டும் 2 அடி அளவுக்கு தண்ணீர் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் சுத்தம் செய்வதற்காக பிரேம்குமார் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்பொழுது விஷவாயு தாக்கி பிரேம்குமார் மயங்கி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது மகன் பிரவீன்குமார் அருகிலிருந்த பிரமோத், சாரநாத் ஆகியோர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்பொழுது பிரேம்குமார், பிரவீன்குமார், பிரமோத் ஆகிய 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதில் சாரநாத் என்பவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷவாயு தாக்கி 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.