புகழ்பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் இரவு பகல் உழைத்து 40 டன் குப்பையை அகற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி விருந்து வைத்த குடியாத்தம் நகராட்சி நிர்வாகம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கெங்கையம்மன் ஆலயத்தில் கடந்த 13ஆம் தேதி தேர் திருவிழாவும் 14ஆம் தேதி சிரசு திருவிழாவும் 16ஆம் தேதி நடைபெற்றது. கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா முடிவில் சிரசு திருவிழாவில் சுமார் 40 டன் குப்பை சேர்ந்துள்ளது. அதனை இரவு பகல் பாராமல் தூய்மை பணியில் ஈடுபட்டு அகற்றிய 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என 300 பேருக்கு குடியாத்தம் நகராட்சி சார்பாக நகராட்சி வளாகத்தில் சுடச்சுட மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் விருந்து வைக்கப்பட்டது.
தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு விருந்து வைத்து சிறப்பான சேவை செய்தீர்கள் என பாராட்டுவதே அவர்களுக்கான பெரிய பரிசு, அங்கீகாரம் என நினைக்கிறார்கள் அதிகாரிகள். கார்த்திகை தீபத்திருவிழா, மதுரை கள்ளழகர் விழா உட்பட பல்வேறு ஊர்களில் நடைபெறும் தேர் திருவிழாக்களில் அதே நகராட்சி மற்றும் அருகில் உள்ள நகராட்சியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் வந்து குப்பைகளை வாரி சுத்தம் செய்கின்றனர். அவர்கள் செய்த பணிக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் பிரியாணி விருந்து வைப்பது வாடிக்கையாகிவிட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர், 'தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்ய செல்லும்போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அவர்களுக்கு தருவதில்லை. உதாரணமாக கையுறை, முக கவசம் போன்ற எதுவுமே சரியாக தருவதில்லை. காலை மாலை என பணியாற்றும் அவர்களுக்கு முறையான ஊதியமும், சலுகைகளும் தருவதில்லை. வழங்கும் சம்பளமும் சரியான தேதியில் வழங்குவதில்லை.
இந்த பணியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே வைத்திருக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவ காப்பீடு செய்வதில்லை. தூய்மை பணியாளர்கள் உடல்நலக்குறைவால் விடுமுறை எடுத்தால் அதற்கு சம்பளம் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் செய்யும் பணிக்கு பிரியாணி விருந்து வைத்தால் போதுமா? இது அவர்களை ஏமாற்றும் செயல் இல்லையா? இதனை அதிகாரிகள் தொடர்ச்சியாக செய்கிறார்கள்.
பிரியாணி வாங்கும் அளவுக்கு கூட சம்பளம் தராத அளவுக்கு அரசு நிர்வாகங்கள் அவர்களை வைத்திருக்கிறது என்றே இதை பார்க்கும்போது தோன்றுகிறது. அதனால்தான் பிரியாணி போட்டுவிட்டு பாருங்கள் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி போடுகிறோம் என பெரிய சாதனை போல் சொல்கிறார்கள்.
இதுப்போன்ற பெரிய திருவிழாக்களில் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி பல டன் குப்பைகளை அகற்றும் பணிக்கு சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும், குப்பை வாருவதை தனியாருக்கு ஒப்பந்தம் தருவதை குறைத்து இவர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவதை எது தடுக்கிறது' என கேள்வி எழுப்புகின்றனர்.