கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்துள்ளது தொழுதூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் ஆறுமுகம்(45). விவசாயியான இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் ராமநத்தம் சென்று அங்கிருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது கணக்கில் இருந்து இரண்டு லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தொழுதூர் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்கள் குடும்ப நகையை மீட்பதற்காக பணத்துடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள், ஆறுமுகத்தை கைத்தட்டி அழைத்து “உங்களுடைய பணம் சாலையில் சிதறிக் கிடக்கிறது அதைக் கவனிக்காமல் செல்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சற்று தூரம் சென்று பணம் இறைந்து கிடக்கிறதா என்று பார்த்துள்ளார். ஆனால், அப்படி சாலையில் பணம் எதுவும் சிதறி கிடக்கவில்லை.
பின்னர் மீண்டும் அவர், தனது இருசக்கர வாகனம் இருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது பைக்கில் வைத்திருந்த இரண்டு லட்சம் பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், மர்மநபர்களைத் துரத்தி பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் தப்பியுள்ளனர். இதையடுத்து ஆறுமுகம் ராம நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை திசைதிருப்பி 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்ககளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சமீபத்தில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளரை மிரட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.