தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில் தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த திருமாவளவன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தேனி லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2013 ஜனவரியில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி நிலையில் தற்போது, (RMSA)புதிய கட்டிடத்துடன், நவீன வகுப்பறையோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு துவங்க உள்ள நீட் தேர்வு பயிற்சி மையமாக தேனி மாவட்ட கம்பம் ஒன்றியத்தில், லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி 276ஆவது பள்ளியாக இடம்பெற்றுள்ளது.
கம்பம் ஒன்றியத்தில் வேறு பள்ளிகள் இல்லாத நிலையில், பிற அரசுப்பள்ளி மாணவர்களும், இப்பள்ளியை நீட் தேர்வு பயிற்சி மையமாக ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், தற்போது, இப்பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்தாமல், தனியார் கம்பம் சிபியு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு செல்லுமாறு மாணவர்கள், ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தியுள்ளனர்.
அரசு ஆன்லைனில் அறிவித்த நீட்தேர்வு பயிற்சி மையத்தை தவிர்த்துவிட்டு வேறு தனியார் பள்ளிக்கு மாற்றுவது அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை குறைப்பதுடன், மாணவர்கள், பெற்றோருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் தரமான கட்டிடம், மின்வசதி, இணைய வசதி, நவீன காணொலிக்காட்சி தொழில்நுட்ப வசதியுடன் கூடிய வகுப்பறைகள் உள்ள நிலையில் இங்கேயே நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா அமர்வு இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.