கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் கூட குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை ஒரு கும்பல் அச்சுறுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் பணியை முடித்துவிட்டுச் செல்வோரைக் குறிவைத்து இந்த வழிப்பறிச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதே நீலாம்பூர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் சாலையில் இரண்டு பேர் நடந்து சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த புதருக்குள் மறைத்திருந்த கொள்ளைக் கும்பல் அந்த இளைஞர்களை வழிமறித்துள்ளனர். அவர்களை கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், அந்த இருவரிடமும் பணம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பல் ''உன் கையில காசு இல்லனா, கூகுள் பே-ல காசு அனுப்பு, உன் நண்பர்களுக்கு போன் பண்ணி காசு அனுப்ப சொல்லுடா'' என மிரட்டியுள்ளனர்.
ஆனால், அந்த அப்பாவி இளைஞர்கள் ''எங்ககிட்டயும் பணம் இல்லை, என் நண்பர்கள் கிட்டயும் பணம் இல்லை. எங்களை விட்டுடுங்க என கெஞ்சியுள்ளனர். அப்போதும் மனம் இறங்காத கொள்ளைக்காரர்கள் வந்த வரைக்கும் லாபம் என நினைத்துக்கொண்டு அந்த இளைஞர்களின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, செல்போனை பறிகொடுத்த அப்பாவி இளைஞர்கள் பீதியடைந்த நிலையில் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நூதனக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்திய நிலையில், இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி கோவை மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.