கஜா புயலின் கோரதாண்டவத்தால் வீடுகள், மரங்கள், விவசாய பயிர்கள், மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்தது. ஒரு வாரம் வரை முழு இருளாக காட்சியளித்தது புதுக்கோட்டை மாவட்டம். வெளியூர் மின்பணியாளர்கள் துணையுடன் மின்சாரம் கிடைக்கத் தொடங்கியது. ஒரு மாதம் கடந்தும் பல கிராமங்களில் வீடுகளுக்கு கூட மின்சாரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில் விவசாய பயிர்களும் கருகத் தொடங்கியுள்ளது. ஆனால் மின்வாரிய அலுவலகம் 99.99 சதவீதம் மின் இணைப்புகள் வழங்கிவிட்டதாக புள்ளிவிபரங்களை அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கட்டியாவயல் புறக்கரைப்பண்ணை கிராமத்தில் 35 நாட்களை கடந்து இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கொடுத்த மின் பணியாளர்கள் அதன் தொடர்ச்சியாக மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் கீழே கிடப்பதை துண்டிக்காமல் மின்சாரம் கொடுத்ததன் விளைவு சின்னையா என்பவரின் 5 மாடுகள் மினகம்பிகளை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பலியானதுடன் மாடுகளை காப்பாற்ற முயன்ற அவரது மகன் ரெங்கசாமியும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து தூக்கி வீசப்பட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின் இணைப்பு கொடுக்கும் மின்வாரிய ஊழியர்கள் மின் பாதைகளை சரி பார்த்து மின்சாரம் விடாததால் தொடர்ந்து உயிர்பலிகள் நடக்கிறது.
மின் பணிகள் தொடங்கும் போது களமாவூர் கிராமத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பே இருவர் மின்சாரம் தாக்கி தொங்கினார்கள். அவர்களை அமைச்சர் கிரேன் மூலம் இறக்கி முதலுதவி அளித்து சிகிச்சைக்கு அனுப்பினார் அதில் சேலத்தை சேர்ந்த ஒரு பணியாளர் பலியானார்.
கடந்த 10 ந் தேதி அரயப்பட்டி கிராமத்தில் இதே போல கீழே கிடந்த மின்கம்பிகளை கடக்கும் போது சுசீலா, சக்திவேல் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று கட்டயாவயலில் 5 மாடுகள் பலியாகி உள்ளது. இப்படி தொடரும் சம்பவம் மக்களை அச்சப்பட வைத்துள்ளது.