இந்திய அளவில் தரம் வாய்ந்த பொருட்களின் பட்டியலில் ஆவின் பொருட்கள் தலைசிறந்த இடத்தில் உள்ளது என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
அடையார் பால் பூத்தில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “மக்கள் பயன்பாட்டுக்குறிய பாலை நாங்கள் விலையேற்றவில்லை. வியாபார ரீதியாக உள்ள பாலை மட்டும்தான் நாங்கள் விலை ஏற்றியுள்ளோம். மற்ற மாநிலங்களை விட நமது மாநிலத்தில் பாலின் விலைக் குறைவு. அவர்கள் 70 விற்கிறார்கள். நாம் 60 விற்கிறோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பொருட்களை 53 கோடி ரூபாய் அளவிற்குத்தான் வாணிபம் செய்ய முடிந்தது. திமுக பொறுப்பேற்றதும் முதல் ஆண்டில் 85 கோடிக்கு வாணிபம் நடந்தது. இந்த ஆண்டு 116 கோடி வாணிபம் உயர்ந்துள்ளது.
ஆவினில் மற்ற பல பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கியமாக இவை அனைத்தும் தரமானது. இந்திய அளவில் தரம் வாய்ந்த பொருட்களின் பட்டியலில் ஆவின் பொருட்கள் தலைசிறந்த இடத்தில் உள்ளது. எவ்விதமான கலப்படமும் இல்லாமல் தாய்ப்பாலுக்கு நிகராக கரந்த பால் கரந்த மாதிரி உள்ளது. சுவைக்கு எவ்விதமான செயற்கையும் சேர்க்காமல் முழுக்க முழுக்க அக்மார்க்கில் உற்பத்தி செய்கிறோம்” எனக் கூறினார்.