பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 105, டீசல் விலை லிட்டர் ரூ. 101, சமையல் எரிவாயு விலை ரூ. 1000 என விற்பனையாகிவருகிறது. அதுமட்டுமின்றி தினசரி விலை உயர்வும் இருந்துவருகிறது. இவற்றால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துவருகின்றன. இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஒன்றிய அரசின் கலால் வரி.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துப் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று (அக்.30) தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
அதன்படி திருச்சி மாநகர், மேற்கு சட்டமன்றத் தொகுதியில், அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சத்யா தலைமையில் இன்று காலை 8.30 மணி அளவில் உறையூரில் சைக்கிள் பேரணி துவங்கியது. இதனை, திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணி உறையூர் நாச்சியார் கோவில், கடைவீதி, சாலைரோடு, தில்லை நகர், 80 அடி சாலை, விஸ்வப்பநாயக்கன் பேட்டை தெரு, புத்தூர் ஹை ரோடு வழியாக அக்ரஹாரம் பேருந்து நிலையத்தில் காலை 9.30 மணிக்கு நிறைவடைந்தது.
சைக்கிள் ஊர்வலத்தில் மேற்குப் பகுதிச் செயலாளர் முரளி, துணைச் செயலாளர் சரண்சிங், பொருளாளர் ரவீந்திரன் உட்பட அக்கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இச்சைக்கிள் பேரணியில், விலை உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த சைக்கிள் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி ஆகியோர் நிறைவுரையாற்றினர்.